வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் 235 பேர் உயிரிழந்தனர்.
4,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தென் அமெரிக்க கண்டத்தில் வெனிசுலா அமைந்துள்ளது.
அந்த நாட்டின் யாராகுய் மாகாணம், சான்பெலிப் நகரில் புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ( இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணி) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதிவானது.
அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அலகில் 7.5 ஆகப் பதிவானது.
முதல் பூகம்பம் ஏற்பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ.
தொலைவில் யுமரே நகர் அமைந்துள்ளது.
இந்த மிகப்பெரிய பூகம்பங்களால் யாராகுய், லா குய்ரா, கராபோபோ, மிராண்டா, அரகுவா, பால்கான் மற்றும் வெனிசுலா தலைநகர் கராகஸ் பகுதிகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சான் பெலிப், யுமரே, மோரோன், தலைநகர் கராகஸ், சக்காவோ, சான் பெர்னார்டினோ, அல்டமிரா, லாஸ் பாலோஸ் கிராண்டஸ், பருட்டா, எல் பராய்சோ, லா குய்ரா, காட்டியா லா மார், மகுடோ, மைக்கெட்டியா உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் தரை மட்டமாகின.
இந்த பகுதிகளில் அடுத்தடுத்து 30-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இவை ரிக்டர் அலகில் 4.9 முதல் 6.3 வரை பதிவாகின.
பூகம்பம் குறித்து வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைநகர் கராகஸில் நிருபர்களிடம் கூறியதாவது: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களால் இதுவரை 235 பேர் உயிரிழந்துள்ளனர்.
4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
பூகம்பகத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து உள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க் கால அடிப்படையில் நடைபெறுகிறது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகிறோம்.
வெனிசுலா முழுவதும் அவசர நிலை அமல் செய்யப் பட்டு உள்ளது.
மீட்பு, நிவாரண பணிகளில் அமெரிக்கா உதவி வருகிறது.
அந்த நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு அருகே 21 கி.மீ.
தொலைவில் மைக்கெட்டியா சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களால் இந்த விமான நிலையம் கடுமையாக சேதமடைந்திருக்கிறது.
இதன்காரணமாக விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன.
பூகம்பத்தால் வெனிசுலாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக முடங்கி உள்ளது.
குடிநீர், சமையல் காஸ் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
தொலைத் தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பூகம்பத்தில் உயிர் தப்பியவர்கள் புதன்கிழமை இரவு முழுவதும் சாலை, தெருக்கள், மைதானங்களில் தங்கியிருந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வெனிசுலா அரசும் தொண்டு அமைப்புகளும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பூகம்ப பாதிப்புக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா.
கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துக்கள்