மாசார்பட்டி அருகே சோலார் நிறுவனத்தில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்த கோபால்சாமியின் மகன் ரவி (62).
இவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் 2 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையம், மாசார்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட அழகாபுரி – அயன் கரிசல்குளம் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது.
இந்தச் சோலார் நிலையத்தில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சேர்ந்த அழகுமலையின் மகன் சேகர் (43) என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை சுமார் 7:00 மணியளவில், சோலார் நிலையத்தில் மின் இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதித்துவிட்டு சேகர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இன்று காலை மீண்டும் பணிக்கு வந்து சோலார் மின் உற்பத்தியைப் பரிசோதித்தபோது, மின் இணைப்பு சரிவரக் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் சோலார் பேனல்கள் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, சோலார் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருந்த 1,500 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்கள் மர்ம நபர்களால் வெட்டித் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருடப்பட்ட காப்பர் வயர்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சோலார் நிறுவன மேலாளர் சேகர் மாசார்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்