News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

12 Jun, 2026 — 04:24 PM
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஜூன் 10 உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த மாவட்டமான தேனிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.

பின்பு கொடைக்கானல் பிரிவு சாலை (காட் ரோடு) அருகே உள்ள அவரது பண்ணை வீட்டின் முகப்பில் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்று இரணடு வழிகள் ஏற்படுத்தப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் அவரதுஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கும்பல் கும்பலாக திரண்டு வந்தனர்.

தேனி ஆட்சியர் வைத்திநாதன், நடிகை சுகாசினி, ராதிகா,நிரோஷா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மத்தியகுழு உறுப்பினர் பாலபாரதி, மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன், தேனி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ.மகேந்திரன், நடிகர்கள் நிழல்கள்ரவி, சமுத்திரக்கனி, பார்த்திபன், கருணாஸ்,விக்னேஷ், லட்சுமன், இயக்குநர்கள் செல்வமணி, ராம், பேரரசு, ரத்தினகுமார், சீமான்,பொன்ராம், வெற்றிமாறன்,ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் வடிவேலு, சித்ராலட்சுமணன், இளவரசு, ஜோ மல்லூரி, திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.சரவணன்,கிராமிய பாடகர்கள் ராஜலட்சுமி, செந்தில்கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு பாரதிராஜாவின் மகள் ஜனனி உள்ளிட்ட உறவினர்கள் நீர்மாலை எடுத்து வந்தனர்.

பின்பு பாரதிராஜாவின் உடல் தூய்மைப்படுத்தப்பட்டு இறுதிச் சடங்கு பணிகள் தொடங்கின.

மூங்கில் பாடை கட்டி அதில் பாரதிராஜாவின் உடலை அடக்கம் செய்யும் இடத்துக்கு தூக்கி வந்தனர்.

இதன் முன்பாக போலீஸாரின் அணிவகுத்து வந்தனர்.

தொடர்ந்து அமைச்சர்கள் சிடிஆர்.நிர்மல்குமார், வன்னியரசு ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்பு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு 3 சுற்றுகளில் 72 குண்டுகள் முழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு பணிகள் நடந்தன.

உறவினர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மண்ணின் மைந்தன் தங்கள் பகுதி மண்ணுக்குள் அடக்கமானதைக் கண்ட ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

பலரும் உணர்ச்சிப்பெருக்கில் என் இனிய தமிழ் மக்களே என்று அவரது பிரபல வார்த்தைகளை ஓங்கி ஒலித்தனர்.

பெரியகுளம் - திண்டுக்கல் பிரதான சாலை என்பதால் பல்வேறு வாகனங்களில் சென்ற பலரும் இறங்கி அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்தனர்.

டி ஐ ஜி சசிமோகன் தலைமையில் தேனி எஸ் பி சினேஹபிரியா, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

காலையிலே வந்த நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோர் இறுதிச் சடங்கு முடியும் வரை மாலை வரை அவரது உடல் அருகே உருக்கமுடன் அமர்ந்திருந்தனர்.

இதே போல் வைரமுத்து, சீமான், பார்த்திபன், வடிவேலு, பாக்கியராஜ், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் அடக்கம் செய்யும் வரை உடனிருந்தனர்.

5

கருத்துக்கள்