கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கட்டாரிமங்கலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் (நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலம்) 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற குருபூஜை விழாவில், காலை 10:00 மணிக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி, கோயிலின் பிரகார வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாகச் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.
கருத்துக்கள்