தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலத்தின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜன் - பரமேஸ்வரி தம்பதியரின் மகன் அருணாச்சலம், கடந்த 17-ஆம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காகத் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு விசாரணையின் போது காவலர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அருணாச்சலம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அருணாச்சலம் இன்று (23.07.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினர் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக்கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அருணாச்சலத்தின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளைஞர் அருணாச்சலத்தின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியுதவி அளிப்பதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட மாணவரணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் நிலா சந்திரன், வட்டச் செயலாளர்கள் பூர்ணசந்திரன், மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழனி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துக்கள்