News Image
தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் : திமுக பிரமுகர் கைது - ரூ.1,05,000 ரொக்கம் பறிமுதல் :

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய புகாரில், திமுகவைச் சேர்ந்த ஒருவரைப் பறக்கும் படை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிநாயகபுரம் 5-வது தெருவில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்தப் பகுதியில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்து கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூட்டுறவுச் சார்பதிவாளர் பொன்மாரி தலைமையில், மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் அடங்கிய குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அதிகாரிகளைக் கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் தப்பியோட முயன்றனர்.

எனினும், அவர்களை விடாமல் துரத்திய அதிகாரிகள், ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரைச் சோதனை செய்தபோது, அவரது வசம் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.1,05,000 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரிடம் இருந்த ஒரு குறிப்பேட்டைப் பறிமுதல் செய்தபோது, அதில் வாக்காளர்களின் பெயர், பாக எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பிடிபட்ட நபரைத் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், இதுகுறித்து புகார் அளித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் பாலன் (27) என்பதும், அவர் திமுக பிரமுகர் என்பதும் உறுதியானது.

இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad Ad